வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கரை புரண்டு ஓடும் காவிரி ஆற்றில் குதித்த வாலிபர்! 15 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் தத்தளித்த அந்த நபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள்!-அதிசயம் ஆனால் உண்மை.

தற்கொலைக்கு முயன்ற சக்தி கணபதி.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள கோனார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரின் மகன் சக்தி கணபதி (வயது 40), பொறியியல் படிப்பு படித்த இவர், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில், இன்று(01.08.2022) மாலை கம்பரசன் பேட்டையில் உள்ள தடுப்பணையிலிருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

காவிரியாற்றின் வெள்ளத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உயிரோடு தத்தளித்து வந்த அவரை கவனித்த அப்பகுதி காவிரி கரையோர மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து காவிரியாற்று பகுதிக்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) விஜயராகவன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள், காவிரி ஆற்றில் நடுபகுதியில் மிதந்து வந்த சக்தி கணபதி என்ற அந்த நபரை, புத்தாபுரம் பிஹெச்எல் (BHEL) பம்பு ஹவுஸ் அருகே உயிருடன் மீட்டு, அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கிழக்கே பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் புத்தாபுரம் தண்ணீர் பந்தல் அருகே காவிரி படுகையோரம் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த மீட்பு பணியில் காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற நபரும் காவிரி ஆற்றில் குதித்து தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக இருந்தார். துரிதிஷ்ட வசமாக மாதவனின் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போன் காவிரி ஆற்று நீரில் மாயமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் வட்டாட்சியர் ரமேஷ், தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சக்தி கணபதி என்ற அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.

என் பெயர் சக்தி கணபதி, நான் தேசிய தொழிநுட்ப நிறுவனத்தில் பொறியியல் படித்துள்ளேன், எனக்கு 40 வயது ஆகிறது, இதுவரை எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனக்கு இதுவரை திருமணமும் ஆகவில்லை, என் தந்தை ராஜலிங்கம் ஓய்வுபெற்ற இராணுவ பொறியாளர். குடும்பத்தில் உள்ள நபர்களும் என்னை மதிப்பதில்லை, தொடர்ந்து அவர்கள் தர குறைவாக பேசினார்கள். அதனால் விரக்தி அடைந்து இன்று மாலை செத்துவிடலாம் என்று காவிரி ஆற்றில் குதித்தேன் என்று அந்த நபர் தெரிவித்தார்.

திருவெறும்பூர் வட்டாட்சியர் ரமேஷ், சக்தி கணபதி பெற்றோருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.

தண்ணீர் கரை புரண்டு ஓடும் காவிரி ஆற்றில், தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் காவிரி ஆற்றிலேயே தத்தளித்து மிதந்து வந்த இந்த நபரை உயிருடன் மீட்டது, மிகப் பெரிய அதிசயம் என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக கூறினார்கள்.

மீட்கப்பட்ட சக்தி கணேஷ் திருவெறும்பூர் வட்டாட்சியர் ரமேஷ் பாதுகாப்பில் தற்போது இருந்து வருகிறார்.

திருச்சி தாராநல்லுரை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் ஆனந்த் (வயது 28) என்பவர் நேற்று (31.07.2022) மாலை 3.30 மணியளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது இவர் நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணியில் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் நிலையில் தான், மேற்படி தற்கொலைக்கு முயன்ற சக்தி கணேஷ் என்பவரை நவல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு உயிரை பணையம் வைத்து உயிருடன் மீட்டு கரை சேர்த்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply