வேளாண்மை திட்டங்கள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு!

velan thittamதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை திட்டங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீடித்த நிலையான கரும்புசாகுபடி திட்டம், திருந்திய நெல் சாகுபடி, மணிலா உற்பத்தி போன்ற திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளில் செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் எஸ்.வெங்கடாஜலபதி என்பவர் நிலத்தில் கரும்பு சாகுபடி, மண்மலை கிராமத்தில் விவசாயி ராஜவேல் என்பவரது நிலத்தில் நெல் சாகுபடி, முறையாறு கிராமத்தில் மணிலா விதை பண்ணை ஆகியவற்றை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் தமிழக அரசு வழங்கி வரும் மானியம் மற்றும் திட்டங்களை விளக்கி கூறினார். தற்போது சொட்டு நீர் பாசனத்தில் கரும்பு பயிருக்கு 1 ஹெக்டருக்கு நீரில் கரையும் உரங்கள் ரூ.25 ஆயிரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தில் கரும்பு பயிர் சாகுபடி குறித்து விவசாயி சேட்டு விளக்கி கூறினார். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேல், துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி) கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணகி, திருவண்ணாமலை வேளாண்மை அலுவலர்கள் பிரபு, பெரியசாமி, செங்கம் வேளாண்மை அலுவலர் நாகராஜன், துணை அலுவலர் ஜெயசீலன், உதவி அலுவலர்கள் கலைமணி, ராமஜெயம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி கலைநேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

– செங்கம் மா.சரவணக்குமார்.