பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 2022-ன் 4-ம் நாளில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் ஜூடோ வீராங்கனை சுஷீலா தேவி லிக்மாபாம் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் ஜூடோ வீரர் விஜய்குமார் யாதவ் வெண்கலப்பதக்கம் பெற்றார். மகளிருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீரர் ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9-ஐ எட்டியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்த மக்கள் இவர்களின் செயல்பாட்டுக்காக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “உங்களின் ஈர்க்கத்தக்க செயல்பாடு எண்ணற்ற ரசிகர்களை உங்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான இளம்பெண்கள் ஊக்கம் பெற்றுள்ளனர். உங்களை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கௌருக்கு வாழ்த்துக்கள். இந்த மேடையை அடைய அவரது வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி வந்துள்ளார். அவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கும் செய்திகளாகும். வரும் ஆண்டுகளில் நீங்கள் பெரும் புகழை பெற வேண்டும்” என்று மற்றொரு ட்விட்டர் செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
“காமன்வெல்த் போட்டிகளில் முதல்முறையாக விஜய்குமார் யாதவ் உத்வேகமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆடவருக்கான 60 கிலோ எடைப்பிரிவு ஜூடோப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள். முந்தைய சுற்றுக்களில் உங்களின் ஆதிக்கம் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கத்தை உங்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகள் பெற உங்களை நான் வாழ்த்துகிறேன்” என்றும் குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு ஒன்றில், “சுஷிலா தேவி லிக்மாபமின் அபாரமான செயல்திறனால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். பாராட்டுக்குரிய திறனையும், நெகிழ்தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
“காமன்வெல்த் போட்டிகளில் வினய் குமார் யாதவ் ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலத்திற்கான முன்னோட்டமாக அவரது வெற்றி அமைந்துள்ளது. வெற்றிகளின் புதிய உச்சத்தை எதிர்காலத்தில் அவர் தொடர்ந்து அடையட்டும்” என மற்றொரு ட்விட்டர் செய்தியில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“காமன்வெல்த் போட்டிகளில் நமது பளுதூக்கும் வீரர்கள் குழு மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளது. அந்த வரிசையில், ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இத்தகைய சிறப்பான சாதனையைப் புரிந்த அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கௌருக்கு வாழ்த்துக்கள்! பஞ்சாபின் ஒரு கிராமத்தில் இருந்து வெண்கலப்பதக்கம் வெல்வதற்கு சர்வதேச மேடைக்கான உங்களின் பயணம் ஏராளமான இளைஞர்கள் தங்களின் கனவுகளை தொடர ஊக்கமளிப்பதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் செய்தியில், திரு தாக்கூர் கூறியிருப்பதாவது: “நீங்கள் பயிற்சி பெற்ற பாட்டியாலாவின் என்எஸ்என்ஐஎஸ் சாம்பியன்களின் தொட்டில் என்பதை நிரூபித்திருப்பது நெஞ்சை நெகிழவைக்கிறது. உங்களின் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்களில் வெள்ளிப்பதக்கம் என்பது மாபெரும் வெற்றியை நோக்கிய முதல்படியாக இருக்கக்கூடும். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகள் பெற உங்களை நான் வாழ்த்துகிறேன்”
சுஷிலா தேவி வெற்றி குறித்தும் திரு தாக்கூர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ன் ஜூடோ பிரிவில் நாம் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள நிலையில், சைப்ரசின் பெட்ரோசை 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டிகளில் முதலாவது வெண்கலப்பதக்கம் வென்று பதக்கங்களின் எண்ணிக்கையை விஜய்குமார் யாதவ் அதிகரிக்கச் செய்துள்ளார். இவர்கள் இருவரையும் நான் வாழ்த்துகிறேன்” என்று தமது ட்விட்டர் செய்தியில் திரு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா