காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ன் 7-வது நாளில் ஆடவருக்கான பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்றிருப்பதை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் சுதிர் வரலாறு படைத்துள்ளார். ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதையடுத்து இந்தியாவின் பதக்கப்பட்டியலில் 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்த எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்றுள்ள சுதிருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். “#காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள சுதிருக்கு வாழ்த்துக்கள்”. உங்களின் உணர்ச்சிபூர்வமான செயல்பாடும், அர்ப்பணிப்பும் உங்களுக்கு பதக்கத்தையும், இந்தியாவுக்கு புகழையும் கொண்டுவந்துள்ளது. எதிர்கால முயற்சிகளிலும் நீங்கள் ஒளிரவேண்டும்” என்று குடியரசுத் தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக ஸ்ரீசங்கருக்கு வாழ்த்துக்கள். உங்களின் நீளமான பாய்ச்சல் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப்பிரிவில் இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை கொண்டுவந்துள்ளது. இந்த மகத்தான சாதனை எண்ணற்ற இந்தியர்களை குறிப்பாக இளைஞர்களை ஊக்கப்படுத்தும்”என்று மற்றொரு ட்விட்டர் செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுதிருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் பாரா விளையாட்டுக்களுக்கு சுதிரின் பதக்கம் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. உயரிய தங்கப் பதக்கத்தை வென்று தமது உறுதித் தன்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். களத்தில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். பாராட்டுகளோடு, அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துகள்.”
எம் ஸ்ரீசங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் எம். ஸ்ரீசங்கர் பெற்றுள்ள வெள்ளிப் பதக்கம் சிறப்புமிக்கது. பல தசாப்தங்களுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அவரது செயல்திறன், இந்திய விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. அவருக்கு நல்வாழ்த்துகள். அவரது சிறப்பான செயல்திறன் வருங்காலத்திலும் தொடரட்டும்.”
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், சுதிருக்கு பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் சுதிர் இடம் பெற்றுள்ளார். முதலாவது காமன்வெல்த் போட்டிகளில் உங்களின் பதக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஹரியானாவைச் சேர்ந்த மேலும் ஒரு விளையாட்டு வீரர் உலக அரங்கில் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். திறமையையும், உணர்வையும் வெளிப்படுத்தி சாம்பியன்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதை இன்று நீங்கள் உலகத்திற்கு காட்டியிருக்கிறீர்கள்.”
எம் ஸ்ரீசங்கரை வாழ்த்தி திரு தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “40 ஆண்டுகளுக்கு பின் நீளம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்றுள்ள எம் ஸ்ரீசங்கருக்கு வாழ்த்துக்கள். இந்த பதக்கத்தை நீங்கள் இந்தியாவின் சீரான வளர்ச்சியை பலப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து மேலும் பல வெற்றிகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எம்.பிரபாகரன்