ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘பயணிகள் பாதுகாப்பு இயக்கம்.

ரயில் பயணிகளின் உடைமைகள், பயணிகள் பகுதி மற்றும் பயணிகளை பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதப்படையான ரயில்வே பாதுகாப்பு படை, ‘பயணிகள் பாதுகாப்பு இயக்கத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் இந்த இயக்கம்,  இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில்களின் பாதுகாப்பு,  காமிராக்கள் மூலம் கண்காணிப்பு, குற்ற நடவடிக்கைகளை கண்காணித்தல், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை, குற்றங்கள் அதிகம் நடைபெறும் ரயில்கள்/ பகுதிகளைக் கண்டறிந்து பயணிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கு திட்டங்களை வகுத்தல் முதலிய ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயணிகள் பாதுகாப்பு இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்காக ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி 365 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களால் கைது செய்யப்பட்டு, அரசு ரயில்வே காவல் படையினரிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். பயணிகளின் உடைமைகளை திருடுதல், கொள்ளை, போதை மருந்து, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட 322 வழக்குகள் பதிவாகின. ரூ. 1 கோடி மதிப்பில் பயணிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply