விடுதலைப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் மூவர்ணக் கொடிகளை ஏந்தியவாறு, மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தின் மூலமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், நடை பயணத்தில் கலந்து கொண்டார்.சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ள சிட்லபாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விடுதலைப் பெருவிழாவில், நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் விதத்தில் 75 நிமிடத்தில் 75 சாதனைகள் எடுத்துக்கூறப்பட்டன.
75 எண் வடிவிலும் மாணவ மாணவிகள் அணிவகுத்து நின்ற நிலையில், உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டர்களில் தேசியக் கொடியேற்றி, மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக வலம் வந்தனர்.
பிஜேபி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேரணியில், தேசப்பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியில், தேசத் தலைவர்கள் வேடமிட்டு மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு தேசியக்கொடிகளை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தின்கீழ், விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வழியாக, பேரணி நடைபெற்றது.திருவண்ணாமலையில் இந்த இயக்கத்தின்கீழ், இருசக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
திருவாரூரில் இந்த இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,; தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர்கள் இன்று தேசியக் கொடியை ஏந்தி மினி மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.கோயம்புத்தூர் மாநகராட்சியின் விக்டோரியா ஹால் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் விடுதலைப்போரில் அறியப்படாத வீரர்களின் கண்காட்சி அம்மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி தொடங்கிவைத்தார்.இதில் பங்கேற்றுப் பேசிய அவர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை அவர் வழங்கினார்.
சுதந்திரப் பெருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஆட்சியர் முரளிதரன் இன்று தொடங்கிவைத்தார்.
கே.பி.சுகுமார்