ஏற்காட்டில் படகு இல்ல ஏரியை ஒட்டியுள்ள சாலை, சேர்வராயன் கோவில் சாலை, மற்றும் அண்ணா பூங்கா ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலைகளின் இறுபுறமும் லாரிகள் நிறுத்தப்பட்டு வந்தது. இது போக்குவரத்திற்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தது. மேலும் ஏரியின் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை நீடித்து வந்தது.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இந்நிலையில் சேலம் கோட்டாட்சியர் லலிதா குமாரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி ஆகியோர் ஏற்காடு வந்தனர். பின்னர் இவர்கள் ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமாருடன் இணைந்து ஏற்காடு லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தை மதியம் 1.30 மணிமுதல் 4 மணி வரை நடைப்பெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் தாங்கள் முன்னர் திரையரங்கத்திற்கு பின்னர் உள்ள காலியிடத்தில் லாரிகளை நிறுத்தி வந்தோம். அங்கு கோடை விழாவிற்காக காலி செய்ய வைத்தனர். பின்பு அங்கு எங்கள் லாரிகள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.
தற்போது லாரிகள் நிறுத்த வேறு இடம் அரசாங்கத்தினால் அளித்தால் லாரிகளை எடுக்கிறோம் என்றனர். அப்போது கோட்டாட்சியர் சார்பில் இந்த 4 நாள் விடுமுறைக்கு மட்டும் தற்காலிகமாக லாரிகளை வேறு இடத்தில் நிறுத்துங்கள். விடுமுறை முடிந்த பிறகு இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி லாரிகள் நிறுத்த வேறு இடம் ஏற்பாடு செய்கிறோம் என்றனர். அதன் பின்னர் லாரி உரிமையாளர்கள் லாரிகளை ஏற்காடு சந்தை வளாகத்தில் நிறுத்தினர்.
-நவீன் குமார்.