கடந்த சில ஆண்டுகளாக நாடு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதாக குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
நாட்டின் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர், சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய வெற்றியின் அடையாளம் குடியரசுத் தெரிவித்துள்ளார்.இந்நாளின் அடையாளமாக மக்களின் இல்லங்களில் மூவண்ண தேசியக் கொடி பறந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்வதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பழங்குடியின மக்களின் பங்கு மகத்தானது என்று தெரிவித்தார்.நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் மனிதாபிமானத்தையும், சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது என்றும் இந்த உணர்வுகளை ஆன்மீகவாதிகளும், சிந்தனையாளர்களும் தொன்றுதொட்டு நமது உள்ளத்தில் பதியவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நவீன இந்தியாவிற்கு ஏற்ற வகையில், நமது பண்டைய கலாச்சாரத்திற்கு புதிய வடிவத்தை உருவாக்கி தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற தத்துவத்தை தேசப்பிதா நமக்கு உணர்த்தினார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகம் இந்திய மக்களின் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாக கொண்டது என்றும் திருமதி. திரௌபதி முர்மு சுட்டிக்காட்டினார்.நாட்டிற்காக தியாகம் செய்த தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை தேசம் என்றும் மறக்காது என்று கூறிய அவர், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.
2047ஆம் ஆண்டு நாட்டின், நூற்றாண்டு சுதந்திர விழாவை கொண்டாடும் வேளையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நாம் நனவாக்கி, சாதனை படைக்க வேண்டும் என்றும் திருமதி. திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், நாம் கட்டமைத்துள்ள தற்சார்பு இந்தியா இயக்கம், இந்த இலக்கை எட்டுவதற்கான திறனை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.கோவிட் பெருந்தொற்றினால் ஒட்டுமொத்த உலகமுமே பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோது, இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ததாகவும், இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், டிஜpட்டல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அவர்கள் அழைத்து செல்வார்கள் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் போன்றவை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இயற்கை வளங்களான மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் நீர்ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சவால்களை உறுதியோடு எதிர்கொண்டு, எழில்மிகு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் திருமதி. திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.
எம்.பிரபாகரன்