சைபர் (கணினி) குற்றம் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குதல் மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவும், நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாத்து, இணையத் தாக்குதல்களைச் சமாளிப்பதில் எதிர்காலத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (சிஐஎஸ்ஓக்கள்) மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுக்குத் திறன்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக சைபர் பாதுகாப்பு இந்தியா முன்முயற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரிகள், சைபர் தாக்குதல்களை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்துகொள்வதையும், அண்மைக்கால பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் தேவையான திறன்களைப் பெறுவதையும், தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு வலுவான மின்னணு-உள்கட்டமைப்பின் பலன்கள் கிடைக்கச்செய்வதையும் இந்த ஆழமான பயிற்சி சிறப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு களத்தில் கொள்கைகளை வகுப்பதற்கும் உறுதியான இணைய நெருக்கடி மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் சட்ட விதிகளின் முழுமையான பார்வையை வழங்குவதிலும் இப்பயிற்சி கவனம் செலுத்தியது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் புகழ்பெற்ற பிரமுகர்களான திரு அபிஷேக் சிங், திரு எஸ்.என். திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2018 இல் தொடங்கப்பட்ட தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சி, அரசு மற்றும் தனியார்துறை ஒத்துழைப்பு மாதிரியின் கீழ் முதன்முறையாக அரசு மற்றும் தொழில் கூட்டமைப்புக்கு இடையிலான ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. 2018 ஜூன் முதல், 1,224 மூத்த அதிகாரிகளுக்கு அந்தந்த நிறுவனங்களின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளைப் பாதுகாக்க இந்தத் திட்டங்கள் உதவியுள்ளன.
எம்.பிரபாகரன்