36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை அகமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மெகா நிகழ்வில் கலந்துகொள்கிறார். மாநிலம் முழுவதிலுமிருந்து 9,000க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி அப்ளிகேஷன் வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். இது நாட்டின் மிகப்பெரிய விளையாட்டுக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
“தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” என்று குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் கூறினார். “இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறவுள்ளது.
மாநிலத்தில் உள்ள ஆறு நகரங்கள் — அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் – புரவலர்களாக இருக்கும். கூடுதலாக புதுதில்லி சைக்கிள் போட்டியை நடத்தும்.
பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.
கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.
எம்.பிரபாகரன்