உத்தரகண்டிலுள்ள அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய நதிகளில் அமைக்கப்பட்டு வரும் 24 நீர் மின் உற்பத்தி திட்டங்கள் காரணமாக சுற்றுசூழல் மற்றும் அங்குள்ள மீன்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என புகார் எழுந்தது.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு முறையாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு 10.10.2014 அன்று மீண்டும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
“அறிக்கை தாக்கல் செய்ய பல முறை அவகாசம் அளித்த போதும் மத்திய அரசு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த அறிக்கையை எதிர்பார்த்து திட்டங்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்னை மிகவும் வலிமையாகவும், திறமையாகவும் செயல்பட்டு வருவதாக கூறி கொள்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனின் நடவடிக்கையைப் போல உள்ளது” என மத்திய அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கூறுகையில்,
“இது தொடர்பாக 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் மத்திய அரசு சார்பில் 2 பேரும், மற்ற 11 பேரும் நியமிக்கப்பட்டனர். இதில் மத்திய அரசு பிரதிநிதிகளைத் தவிர மற்ற அனைவரும் ஒரு மனதாக சுற்றுசூழல் மற்றும் மீன்வளம் பாதிக்கப்படும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்த வழக்கில் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரகண்டில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து அக்டோபர் 29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in