கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோதியின் நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளதுடன் அவர்கள் உயர்ந்த கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமது அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன் அவர்களுடைய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முதலாக செங்கோட்டையில், பிரதமர் மோடி, உரையாற்றியதிலிருந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகக் கூறினார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், அளிக்கப்படும் பயிற்சி பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாகவும், சுயசார்புடனும், தொழில்முனைவோராகவும், மாறுவதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வகையிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை களையும் வகையிலும் அவ்வப்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறை பல்வேறு அறிவுரைகளை அளித்து வருவதாகவும், டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா