ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், அவரது நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருக்கும் இருவரின் குடும்பத்தினர் ஆகியோரின் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கி வைக்க மத்திய அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் 2011-இல் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் 2011, அக்டோபரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதிதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சௌத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
“ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கியதற்கு கைமாறாக, கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் பிரிட்டன், மொரீஷியஸ் நாடுகளில் உள்ள தனது துணை நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.549 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது.
அதே பிரிட்டன் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றின் மூலமும் சன் டைரக்ட் நிறுவனத்தில் கூடுதலாக சுமார் ரூ.193 கோடியை முதலீடு செய்தது.
ஆனால், இந்த முதலீடுகளுக்கு, மத்திய நிதித் துறையின் கீழ் உள்ள அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் விதிகளை மீறி அனுமதி அளித்ததா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நாளை (13.10.2014) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கோடிக்கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அது தொடர்பான சட்டப்பிரிவின் கீழ், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துகளில் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கிவைத்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சன் டைரக்ட் நிறுவனத்தில் மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள மேக்ஸிஸ் சார்பு நிறுவனங்களின் முதலீட்டு விவரங்களை அலுவல்பூர்வமாக அனுப்பி வைக்குமாறு அந்நாடுகளின் அரசுக்கு மத்திய அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அங்கிருந்து விரைவில் விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டதும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் சொத்துகளை முடக்கி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிகிறது.
இதற்கிடையில் ஏர்செல் – மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் இதுவரை விசாரணை நடத்தாதது ஏன்? என்று சி.பி.ஐ.யிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து கேள்வி எழுப்பினார்.
ஏர்செல் பங்குகளை வாங்குவதற்காக பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 3,500 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் செய்த முதலீடுகள் சட்டவிரோதமானவை என்று சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் ரூ.600 கோடி அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மட்டும்தான் மத்திய நிதியமைச்சரின் கீழ் உள்ள அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க முடியும். அதற்கும் அதிகமான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு.
இந்த விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செயல்பாட்டை விசாரிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுவிட்டு, இன்னும் அவரிடம் விசாரிக்காமல் இருப்பது ஏன்? இதுகுறித்து அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபர் 16-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து உத்தரவிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in