2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலுடன் இணைந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக, வரும் 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி நேற்று (20.10.2014 ) தெரிவித்துள்ளார்.
‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதேநேரத்தில், ‘2ஜி’ ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் மூலமாக, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் பங்குத்தாரர்களாக உள்ள, கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் பணம் சட்ட விரோதமாக கைமாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, விசாரணை நடத்திய, அமலாக்கத் துறையினர், ஏப்ரல்25-ம் தேதி டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா, தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவன புரமோட்டர்களான, ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா உட்பட 10 தனிநபர்கள் மீதும், ஒன்பது நிறுவனங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குற்றச்சாட்டுகளை சுமத்தலாமா என்பது தொடர்பான உத்தரவை, நேற்று (20.10.2014) பிறப்பிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, உத்தரவு இன்னும் தயாராகவில்லை. அதனால் உத்தரவு பிறப்பிப்பது, வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என நீதிபதி ஷைனி அறிவித்தார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in