தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேயுடன் இணைந்து, ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இன்று துவக்கிவைத்தார். இந்த மாநாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. 2021 டிசம்பரில் நடைபெற்ற ‘ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டின்’ தொடர்ச்சியாக நிறுவப்பட்ட நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பின் கீழ், இது நடத்தப்படுகிறது.
தொடக்க உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் , சுதந்திரமான, நியாயமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் தூண்டுதலற்ற தேர்தல்கள் ஜனநாயக அரசியலின் மூலக்கல்லாகும், இது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஊக்குவிப்பாக அமையும். இறையாண்மை என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு சொந்தமானது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், இளம் வாக்காளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என அனைவரையும் இணைத்து செயல்படுவதுடன், பாரபட்சங்களைக் களைவதை இது குறிக்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் ஜனநாயகம் எப்போதுமே இந்திய நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும், இது ஒரு வாழ்க்கை முறை. பலதரப்பட்ட கருத்துக்கள், உரையாடல்கள், விவாதங்கள், ஏற்புடையவை, ஆக்கிரமிப்பு இல்லாமை ஆகியவை நமது கலாச்சாரத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். தேர்தல் முடிவுகளில் மக்கள் நம்பிக்கை வைப்பதே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் மிக அடிப்படையான ஒழுங்குமுறை என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
இந்த மாநாட்டில் ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், கபோ வெர்டே, ஆஸ்திரேலியா, சிலி, ஃபெடரல் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேசியா, கிரீஸ், பிலிப்பைன்ஸ், சாவோ டோம் & பிரின்சிப், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
எம்.பிரபாகரன்