தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில் நாட்களாக பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கோட்டத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மொத்தம் உள்ள 53 குளங்களில் 45 குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 4 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 4 குளங்கள் 75 சதவிதத்திற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
கோரம்பள்ளம் கோட்டத்தில் மொத்தம் உள்ள 54 குளங்களில் 7 குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 6 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 41 குளங்கள் 75 சதவிதத்திற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
வைப்பாறு கோட்டத்தில் மொத்தம் உள்ள 27 குளங்களில் 2 குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 8 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 17 குளங்கள் 75 சதவிதத்திற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 403 குளங்களில் 12 குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 28 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 363 குளங்கள் 75 சதவிதத்திற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
24.10.2014 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த அரசு முதன்மைச் செயலாளர் (தொழில்துறை) மற்றும் தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்.சி.வி.சங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகம் அருகில் மழை நீர் கடலில் கலக்கும் இடத்தையும், கோரம்பள்ளம் குளத்தில் நீர் தேங்கியுள்ளதையும், கோரம்பள்ளம் உப்பாறு ஒடை 24-வது கண்மாய் முழு அளவில் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதையும், பேய்க்குளம், கடம்பா குளம், புன்னக்காயல் கடற்கரை ஆகிய இடங்களையும் பார்வையிட்டனர்.
பின்னர் மாநகராட்சி, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை போன்ற துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சோ.மதுமதி, தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை வெங்கடகிருஷ்ணன், தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் ரகுநாதன், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், வட்டாட்சியர்கள் தூத்துக்குடி இளங்கோ, திருச்செந்தூர் வெங்கடாசலம், திருவைகுண்டம் இராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.