ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் அவமதிக்கிறது : ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் கண்டனம்!

seyit Rath Al Husseinஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும், இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும்.

இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக, இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.