தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல!- குறைந்த பட்சம் ரொக்கமாக ரூ. 2,500 மற்றும் கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.

தமிழர்களின் தலையாய பண்பாட்டுப் பண்டிகை பொங்கல் பண்டிகை. குறிப்பாக விவசாயிகளுக்குத் தான் பொங்கல் பண்டிகை பெருமகிழ்ச்சியை தரும், ஊக்கமளிக்கும், பயன் தரும் பண்டிகையாக அமையும்.

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க அறிவித்திருந்தாலும் இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அறுவடை செய்திருக்கின்ற வேளையில் அவர்களிடம் கரும்பை கொள்முதல் செய்து, அதனை பரிசுத் தொகுப்பாக கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏதிரான போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், அதற்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் பொது மக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

குறிப்பாக ரொக்கமாக அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாயும் போதுமானதல்ல. குறைந்த பட்சம் 2,500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும்.

எனவே தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 2,500 மற்றும் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க அறிவிப்பு வெளியிட்டு, செயல்படுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ். திவ்யா

Leave a Reply