திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பைபாஸ்சாலை, தங்கையன் கோயில், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமச்சேரி, கிளிக்கூடு வழியாக கல்லணை வரை செல்லும் சாலையில் இரவு, பகல் எந்நேரமும் லாரிகள் மணல் அள்ளி செல்கிறது.
இதனால் பைபாஸ்சாலை, தங்கையன் கோயில் அருகில், பிருந்தாவன் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் ஒரு உணவு விடுதி மற்றும் டீ கடை இருக்கிறது. இங்குதான் மணல் வியாபாரம் செய்யும் புரோக்கர்கள் எப்பொழுதும் முகாமிட்டுள்ளார்கள்.
மணல் அள்ளி வரும் லாரிகளை மறித்து வியாபாரம் பேசுகின்றனர். இதனால் லாரிகள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பைபாஸ் சாலைவரை வாகனங்கள் தேங்கி நின்று விடுகின்றன. இது போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.
அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களும், கல்லணைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் பைபாஸ் சாலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் பிருந்தாவன் வித்யாலயா பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பிருந்தாவன் வித்யாலயா பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் லாரி ஓட்டுநர்களுக்கும், பள்ளிக்கு வாகனத்தில் வரும் பெற்றோர்களுக்கும் பலமுறை வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுக்குறித்து இன்று (18.11.2014) காலை 9.26 மணிக்கு நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தின் மூலம், திருச்சி மாநகர காவல்துறைக்கு புகார் செய்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்து உள்ளனர்.
தங்கையன் கோயில் அருகில் பிருந்தாவன் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள, உணவு விடுதி மற்றும் டீ கடையில் முகாமிட்டுள்ள மணல் வியாபாரம் செய்யும் புரோக்கர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினாலே, இப்போக்குவரத்து பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை இதை போர்கால அடிப்படையில் கவனிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in