தமிழக அரசு – மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல!-குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல.

குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் சேதமான நெற்பயிர்களுக்கும், உழுந்துக்கும் அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளின் முதலீட்டையும், செலவையும் ஈடுகட்டும் விதமாக அமையவில்லை.

அதாவது விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்து நடவு நட்டு, உரம் போட்டு, பாதுகாத்து பயிர் செய்தார்கள். மேலும் கூலித்தொழிலாளர்களின் கூலி, உர விலை. இயந்திரப் பயன்பாடு எனக்கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்ச செலவு ரூ. 30 ஆயிரம் ஆகும். இந்நிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் மழையினால் சேதமுற்றது.

கடந்த 4 மாத காலமாக நெற்பயிர் விளைச்சலுக்கு நடவு முதல் அறுவடை வரை உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் உழைப்பும் வீணாகிவிட்டது. செலவு. உழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டால் நெற்பயிர்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால் தான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரளவுக்கு நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள்.

தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ரூ. 20 ஆயிரம் போதுமானதல்ல என்பதை விவசாயிகளே தெரிவிக்கின்றனர். அதே போல மழையினால் பாதிக்கப்பட்டுள்ள உழுந்து, கடலை உள்ளிட்ட மற்ற பயிர்களுக்கும் விவசாயிகள் அடைந்துள்ள இழப்பீட்டிற்கு ஏற்ப நிவாரணத்தொகையை வழங்க வேண்டும்.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் மழையினால் நனைந்து நெல்மணிகள் முளைத்து வருவதாக
தேக்கமடைந்துள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல்மூட்டைகளை பாதுகாக்கவும், நனைந்து வீணாகியுள்ள நெல்மூட்டைகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் என்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply