ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறத்தல்.

தமிழக அரசு, மாநிலத்தின் சில பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாக பொது மக்கள் தெரிவிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. பால் விநியோகம் தாமதமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன. நாள்தோறும் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதிலிருந்து நாள்தோறும் சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆவின் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய பாலின் அளவு குறைந்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறிப்பாக சென்னை மக்களின் தேவைக்காக தினமும் 14 இலட்சம் லிட்டர் பால் தேவைப்படும் வேளையில் சுமார் ஒரு இலட்சம் லிட்டர் பாலுக்கான தட்டுப்பாடு உள்ளது. இதனால் நுகர்வோருக்கு பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இப்படி அரசின் ஆவின் பால் நிறுவனத்தால் சரியாக பாலை விநியோகம் செய்ய முடியாத நேரத்தில் தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு பொது மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆவின் பால் ஓரளவுக்கு குறைவான விலையில் கிடைக்கும் என்பதற்காகத் தான் ஏழை, எளிய, சாதாரண மக்கள் ஆவின் பாலை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஆவின் பால் தட்டுப்பாட்டால் விலை அதிகமான தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயச்சூழலுக்கு இப்போது பொது மக்கள் தள்ளப்படுவதால் அவர்களுக்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள். இதனையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எச்சூழலிலும், எக்காரணத்திற்காகவும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடான. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விற்பனை செய்வதில் ஏதேனும் குறை இருப்பின் அதனையும் சரி செய்து கொடுத்து, பால் கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியவற்றில் குறை இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசு, மாநிலத்தில் ஆவின் பால் எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் தட்டுப்பாடில்லாமல் பால் கிடைப்பதை உறுதி செய்துகொள்ள தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply