தமிழக அரசு, ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் விற்பனை செய்வதில் முக்கிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறத்தல்.

ஜி.கே.வாசன்.

பால் கொள்முதல் விலைப் பிரச்சனையில் பொது மக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு அரசு தான் காரணம்.
ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு, ஆவின் பால் விற்பனையில் பொது மக்களுக்கான சேவையை முறையாக செய்ய வேண்டும். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆவின் பால் விற்பனையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்களுக்கு பொருளாதார சிரமம் ஏற்படுவதை அறிவோம்.

இந்நிலையில் பால் கொள்முதல் விலை சம்பந்தமாக பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக கிராம மூலமாக ஆவினுக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். அதிலும் குறிப்பாக சாதாரண மக்கள் தான் ஆவின் பாலை பெருமளவு வாங்கிப் பயன்படுத்துவதால், அவர்கள் தான் பெருமளவு சிரமப்படுவார்கள்.

பால் கொள்முதல் விலை சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை விடுத்து பேச்சு வார்த்தை தோல்வி, தமிழக முதல்வருடன் பேசி முடிவு வெளிவரும் என்றால் அதுவரையில் ஆவின் பால் கிடைப்பதில் பொது மக்களுக்கு உள்ள சிரமத்திற்கு யார் பொறுப்பு.

ஆவின் பால் கிடைக்காமல், தனியார் நிறுவனப் பாலை அதிக விலைக்கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பொது மக்கள். இதனால் பொது மக்களுக்கு செலவீனம் கூடுதலாகிறது.எனவே தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதன் மூலம் பால் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனையை தீர்த்து, பால் விநியோகம் செய்வதில் தாமதமில்லாமல், நுகர்வோருக்கு, பொது மக்களுக்கு தடையில்லா ஆவின் பால் விற்பனை செய்யப்பட வேண்டும்.

எனவே அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் இனிமேல் தட்டுப்பாடில்லாமல், பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் காலத்தே கிடைப்பதற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply