தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 255 விசைப்படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்களின் 2 விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். இதனைப் பார்த்த மற்ற மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து கரை திரும்பினர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் நீடிக்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலையே ஏற்படும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.எனவே மத்திய அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் தடையோ, இடையூறோ, பாதிப்போ ஏற்படக்கூடாது என்பதை மிக முக்கிய கவனத்தில் கொண்டு, உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இனிமேலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட அராஜகம் கைது தொடரக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் மத்திய அரசானது இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக அரசும், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட 12 தமிழக மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply