தமிழக அரசு, சட்டம் ஒழுங்கை மிக மிக முக்கிய கவனத்தில் கொண்டு அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல், கொலை அதிகரித்திருப்பதால் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக்கி, வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி, அனைவருக்குமானபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கமாகிவிட்டது.

சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவமும், கொலையும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் குற்றச்செயல்களுக்கு பயமில்லாதது என்றால் அதனைத் தடுத்து நிறுத்துவதிலும், தண்டனை வழங்குவதிலும் உள்ள இடற்பாடுகளும், இடையூறுகளும் தான்.

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலால் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு தூத்துக்குடி வழக்கறிஞர், அரியலூர் வழக்கறிஞர், தருமபுரி வழக்கறிஞர் ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்போது சென்னை பெருங்குடி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டம் படித்து வழக்கறிஞராக பணிபுரிபவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் பணி என்ன. இதனை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்.

மேலும் மாநிலம் முழுவதற்குமான காவல்துறையினரின் கண்காணிப்பும், ரோந்து பணிகளும் முழுமை பெறவில்லை. இதனால் சமூக விரோதிகளின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனை தடுத்து நிறுத்தவும், தொடராமல் இருக்கவும் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றம் புரிபவர்களுக்கு தயவு தாட்சண்யம் இன்றி தண்டனை கிடைத்தால் தான் ஓரளவுக்கு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். இல்லையென்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியே.

இந்நிலையில் மாநிலம் முழுவதற்குமான, அனைவருக்குமான சட்டம் ஒழுங்கை முறையாக, சரியாக, கடுமையாக கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாக நடைபெறும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply