ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி தொடக்க விழா திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இன்று (28.11.2014) மாலை நடைப்பெற்றது.
அங்கு 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கோட்டை வடிவிலான மேடையின் வலதுபுறம் “வளமான தமிழகம்” என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டையும், இடதுபுறம் “வலிமையான பாரதம்” என்ற வாசகத்துடன் டெல்லி செங்கோட்டையின் மாதிரியும் வைக்கபட்டு இருந்தது.
இன்று மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கூட்டம் தொடங்கியது. 5 மணிக்கு விழா மேடைக்கு ஜி.கே.வாசன் வந்தார்.
அதற்கு முன்னதாக விழா மேடை அருகே, தியாகி அருணாசலம் பெயரில் அமைக்கப்பட்ட 32 அடி உயர கொடி கம்பத்தில், ஜி.கே.வாசன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
ஜி.கே.வாசன் அப்போது தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் மேடையில் பேசிய ஜி.கே.வாசன் தனது கட்சியின் பெயரை “தமிழ் மாநில காங்கிரஸ்” என அறிவித்தார்.
இன்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்ததால் கூட்டம் கூடுமா? ஜி.கே வாசனின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் வருவார்களா? என்ற குழப்பமும், சந்தேகமும் பொதுமக்களிடமும், மாற்றுக் கட்சினரிடமும் நிலவியது.
ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாகனங்களில் வந்து திருச்சி மாநகரத்தை திக்கு முக்காட வைத்தனர். இதனால் திருச்சியில் பல மைல் தூரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆனால், ஜி.கே.வாசன் தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்தார்.
-கே.பி.சுகுமார்.
-கோ.லெட்சுமிநாராயணன்.
.