மத்திய அரசு, தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் விதமாக நிலக்கரிச் சுரங்கத் திட்டம் ரத்து என்று அறிவித்திருப்பது நன்றிக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

ஜி.கே.வாசன்.

மத்திய அரசு, தமிழகத்தில் டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகள் உள்ளிட்ட தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசின், நிலக்கரிச் சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டு டெல்டா பகுதிகள் நீக்கம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு விவசாய சங்கங்களும், த.மா.கா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

காரணம் ஏற்கனவே தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது.

இந்நிலையில் இன்று மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்கள் தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் வகையில் அமைந்திருப்பதால், த.மா.கா சார்பில் மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயி (பிஎம்-கிசான்) திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதி உதவி செய்து வரும் வேளையில், மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பானது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு உறுதுணையாக, நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply