வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி உயர்த்தியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஆறு நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள டாக்டர் ஜிதேந்திர சிங், அங்குள்ள இந்திய சமுதாயத்தினர் மத்தியில் உரையாற்றினார்.
உலகமே மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்திய வம்சாவளியினரை எதிர்நோக்குகிறது என்று அவர் கூறினார். அவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கொள்கை, வசுதைவ குடும்பகம் எனும் உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் என அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா, மாற்றத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியின் ஒரு பகுதியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது பெரிய உலகளாவிய புத்தொழில் அமைப்பைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார். இது ஆண்டுக்கு 12 முதல் 15 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து 90,000 புத்தொழில் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன என அவர் கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய் நாட்டுக்கான திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகளுடன் இந்தியாவின் வளர்ச்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று திரு ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்