அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவுடன், 6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (30.04.2023) லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இதுபோன்று அறிவியல் அருங்காட்சியகங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அவர் எடுத்துரைத்தார்.
இது போன்ற அருங்காட்சியகங்களை அமைப்பதன் மூலம், இளைஞர்களின் அறிவியல் ஆர்வம் தூண்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சாதாரண குடிமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களது மறைந்திருக்கும் திறன்களை உணரவும், உள்ளார்ந்த திறன்களைக் கண்டறியவும் உதவும் என்றும் அவர் கூறினார். அறிவியல் அருங்காட்சியகங்கள், இளைஞர்களின் விஞ்ஞான மனநிலையைக் கூர்மைப்படுத்தவும், புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் உதவும் என அவர் தெரிவித்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவிட் பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பான அரங்கத்துக்கும் அமைச்சர் சென்று பார்வையிட்டார். உலகின் முக்கிய உயிரி அறிவியல் பொருளாதாரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியா நான்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) “மிஷன் கோவிட் சுரக்ஷா”என்ற இயக்கத்தின் மூலம் நான்கு தடுப்பூசிகளை விநியோகித்ததாகவும் கோவாக்சின் உற்பத்தியைப் பெருக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்