பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே வானொலி மூலம் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ‘மன் கி பாத்’ எனப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயத்தை திரையிடும் நிகழ்ச்சி மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்களுடன் இணைந்து, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பிரதமரின் உரையைக் கேட்டார்.
இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு நரேந்திர மோடி மிகவும் வலிமையான தலைவர் எனவும் அவர் நம் நாட்டிற்குப் பிரதமராக இருப்பது நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கக் கூடியது என்றும் கூறினார். நாட்டு மக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி., கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதை முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுதவாகத் தெரிவித்தார்.
உலக அரசியல் அரங்கில் இந்தியா ஒரு காலத்தில் பின் வரிசையில் இருந்ததாக அவர் கூறினார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆளுமை, ஆற்றல், உறுதிப்பாடு, செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக, உலக அரங்கில் எந்த ஒரு செயல்திட்டமும் இந்தியாவின் ஒப்புதலுடன்தான் இறுதி செய்யப்படும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது என அவர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகாலப் பயணம், இந்தியா ஒரு மகத்தான தேசம் என்ற நமது முன்னோர்களின் கனவை நனவாக்குவதற்கான முக்கியமான காலகட்டமாக இருக்கும் என அவர் கூறினார். தேசத்தை சிறப்பாக நிலைநிறுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்தையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மற்றவர்களின் நல்ல பண்புகளை எடுத்துரைத்து அதை மக்களிடம் பரப்புவதற்காக மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமர் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இதைக் கேட்டு உத்வேகம் பெறுவதாகவும், இந்த உரையின் மூலம் நாட்டு மக்களை பிரதமர் இணைப்பதாகவும் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திவாஹர்