அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் மே 11 அன்று தேசிய தொழில் நுட்ப தினத்தை இந்த ஆண்டு கூட்டாக கடைப்பிடிக்கின்றன என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் பற்றி இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சிஎஸ்ஐஆர், புவி அறிவியல், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை உள்ளிட்ட அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப தினத்திற்கு “அடல் டிங்கரிங் ஆய்வுக் கூடங்கள்” என்பது மையப்பொருளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப துறைச்சார்ந்த பொறியாளர்கள் ஆகியோரின் சாதனைகளை எடுத்துரைப்பதாக தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சியை இயக்குவதில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் தருணமாக தேசிய அறிவியல் தினம் விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளன என்று கூறிய அமைச்சர், இதற்கு பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் அரசு மேற்கொள்ளும் சிறப்புமிக்க சீர்திருத்தங்களே காரணம் என்று கூறினார்.
தேசிய தொழில்நுட்ப தினத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும், அறிவியல் ஊடக தகவல் பிரிவு உருவாக்குவதில் தற்போதைய நிலைப்பற்றியும், அறிவியல் ஆய்வு திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஊழியர்கள் நியமனத்துக்கான வயது வரம்பு தளர்வு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் மத்திய அரசின் அறிவியல் முதன்மை ஆலோசகர், பேராசிரியர் அஜய் குமார் சூத், அறிவியல், தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சிஎஸ்ஐஆர், புவி அறிவியல், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை உள்ளிட்ட அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
எம்.பிரபாகரன்