தேசிய மின்-ஆளுமைப் பிரிவின் (NEGD), திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 36-வது பயிற்சித் திட்டம், புது தில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தைச் சேர்ந்த மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 24 பங்கேற்பாளர்களுடன் மே 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஐந்து நாள் பயிற்சித் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்காக நடத்தப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு இந்தியா என்பது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட (MEAITY) முன்னெடுப்பு ஆகும். இது சைபர் குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவும், சைபர் தாக்குதல்களைக் கையாள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது.
இந்த 5 நாள் பயிற்சி தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் சைபர் தாக்குதல்களை விரிவாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ளவும், சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவைப் பெறவும் உதவுகிறது. இந்தப் பயிற்சித் திட்டம், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் அரசின் வல்லுநர்களை ஒன்றிணைப்பதோடு, சைபர் பாதுகாப்பின் முக்கிய கள சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது.
2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சி.ஐ.எஸ்.ஓ பயிற்சி என்பது அரசு மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு ஜூன் முதல் 2023 மே வரை, 1,419 க்கும் மேற்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு, 36 கட்டங்களாக தேசிய மின்-ஆளுமைப் பிரிவு திறம்படப் பயிற்சி அளித்துள்ளது.
எம்.பிரபாகரன்