மத்திய அறிவியல் & தொழில்நுட்பம்(தனி பொறுப்பு); புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் டெல்லியில் 8வது அகில இந்திய ஓய்வூதிய அதாலத் எனப்படும் ஓய்வூதிய குறை தீர் முகாமை நாளை தொடங்கி வைக்கிறார். அங்கு நாள்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டு தீர்க்கப்படும்.
சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஓய்வூதிய அதாலத்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வெவ்வேறு இடங்களில் காணொலி மூலம் ஓய்வூதிய அதாலத் இணைக்கப்படும். தற்போது வரை 7 முறை, அகில இந்திய ஓய்வூதிய அதாலத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் 24218 வழக்குகள் எடுக்கப்பட்டு 17235 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.
நாளை புதுதில்லியில் நடைபெறும் 50வது பிஆர்சி (ஓய்வூதியத்திற்கு முந்தைய ஆலோசனை) பயிலரங்கிற்கும் அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையால் நடத்தப்படும் இந்த பயிலரங்கு, அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த 1200 அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையால் 2017 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் ஓய்வூதிய அதாலத் திட்டம் தொடங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தேசிய ஓய்வூதிய அதாலத், ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை விரைவாகத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது.
திவாஹர்