கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கைத் தொடங்கி வைத்த டாக்டர் எல்முருகன், கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் திரைப்படங்கள்கொண்டு செல்வதாகக் கூறினார்.

கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு பிரித்துல் குமார் மற்றும் இந்திய திரைப்படத் தொழில்துறையின் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

திரைப்பட நட்சத்திரங்கள், அலுவலர்கள் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளிடையே உரையாற்றிய டாக்டர் முருகன், 50 மொழிகளில் 3,000 க்கும் அதிகமான திரைப்படங்களுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது என்றார். கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் இந்த  திரைப்படங்கள் கொண்டு செல்வதாக அவர் கூறினார். தற்போது புகழ் பெற்றிருக்கும் முதுமலையின் எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் உதாரணத்தை எடுத்துரைத்த அமைச்சர், சிறந்த உள்ளடக்கங்களுக்கு எல்லைகள் இல்லை என்று குறிப்பிட்டார். இந்திய திரைப்படங்களின் உள்ளடக்கம் உள்ளூரிலிருந்து உலக அளவுக்கு செல்லும் சகாப்தத்தை இந்தியா காண்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2023-ல் அசாதாரணமாக 11.4% வளர்ச்சியடைந்து ரூ 2.6 ட்ரில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்கு பின், 2022-ல் இந்தியாவின் திரைப்படத் துறை மூலமான வருவாய் 2021-ஐ விட மூன்று மடங்கு அதிகரித்து 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது என்றும், 2025 வாக்கில் இது 3 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply