ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு பிரதமர் அளித்த அறிக்கை.

ஜப்பான் பிரதமர் மேதகு ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற இந்திய- ஜப்பான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்த பிரதமர் திரு கிஷிடாவை மீண்டும் ஒரு முறை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமைத்துவம் ஏற்றுள்ள வேளையில், ஜி7 உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. உலகம் சந்தித்து வரும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதன் அவசியம் குறித்து ஜி7 நாடுகள் மற்றும் இதர அழைப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். ஹிரோஷிமா ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஒரு சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவிருக்கிறேன்.

ஜப்பானிலிருந்து பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோரெஸ்பை செல்வேன். இது எனது முதல் பயணம். பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை. பப்புவா நியூ ஜீனியா பிரதமர் மேதகு திரு ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு மே 22, 2023 அன்று தலைமை வகிப்பேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை 14 பசிபிக் தீவு நாடுகள் ஏற்றுக் கொண்டதற்கு அந்த நாடுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2014-ஆம் ஆண்டு எனது ஃபிஜி பயணத்தின் போது இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற நம்மை ஒருங்கிணைக்கும் விஷயங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடன் உரையாட ஆவலோடு இருக்கிறேன்.

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டத்துடன், பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் ஜெனரல் சர் பாப் டாடே, பிரதமர் திரு ஜேம்ஸ் மாராபே மற்றும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவேன்.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர் திரு அல்பனீசின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்குச் செல்லவிருக்கிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற நமது முதல் இந்திய- ஆஸ்திரேலிய வருடாந்திர உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும்,  நமது இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும் இந்தப் பயணம் வாய்ப்பாக இருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையை மிகவும் எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலிய நாட்டின் தொழில்துறை தலைவர்களுடனும், சிட்னியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடுவேன்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply