மே 23-25 வரை பெங்களூருவில் ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டம்.

இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் மே 23 முதல் 25 வரை நடைபெற உள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் இந்தக் கூட்டத்தை மே 24-ஆம் தேதி தொடங்கி வைப்பார்.

பலதரப்பட்ட வர்த்தக அமைப்புமுறைகளை சீர்படுத்துதல் உலகளாவிய வர்த்தகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், வளம் மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக வர்த்தகத்தை உருவாக்குதல் போன்ற விஷயங்கள் குறித்து மூன்று நாள் கூட்டத்தின் போது ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பு நாடுகள், பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் 100 பிரதிநிதிகள் கலந்து ஆலோசிப்பார்கள்.

முதல் நாளான மே 23-ஆம் தேதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதன்பிறகு ஜி20 பிரதிநிதிகளுக்கான பிரத்தியேக கலாச்சார நிகழ்ச்சி மற்றும் நகர உலாவுடன், இரவு விருந்து வழங்கப்படும். இரண்டு மற்றும் மூன்றாம் நாளன்று, ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான தலைப்புகளில் விளக்க உரை அளிக்கப்படும்.

உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான வளர்ச்சியை உருவாக்குவதற்காக உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அதிகரித்து வரும் சவால்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, தற்போதுள்ள வாய்ப்புகளை அதிகப்படுத்துவது தான் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் முதன்மை நோக்கமாகும்.

திவாஹர்

Leave a Reply