கடல்சார் துறையை தற்சார்புடையதாக வழிநடத்த ஆலோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கலந்துரையாடல்கள்
சாதனைகளைக் கொண்டாடவும் வரவிருக்கும் ஆண்டிற்கான இலக்குகளைப் பற்றி விவாதிக்கவும் சிந்தனைக் கூட்டம்
நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலக அளவில் ஒரு புதிய நற்பெயரைப் பெற்றுள்ளது. அதை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்”: திரு சர்பானந்தா சோனோவால்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், திரு. சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள்/பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால், கடல்சார் துறையில் இந்தியாவை உலகளாவிய தலைமையாக நிலைநிறுத்த அமைச்சகமும் அதன் ஒவ்வொரு அமைப்புகளும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினார். இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை, கடல்சார் துறையின் தாக்கத்தை எளிய மொழியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து அமைச்சகத்தின் இலக்கை வலியுறுத்தினார்.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலகளவில் ஒரு புதிய நற்பெயரைப் பெற்றுள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது பிரதமரின் பார்வையை செயல்படுத்த அமைச்சகம் அனைத்து முக்கிய அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், 2022-23 நிதியாண்டில் துறைமுகச் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் அடைந்த சிறந்த செயல்திறனைக் குறிப்பிட்டார். “பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட எம்ஐவி 2030, இந்தியாவை உலகின் முன்னணி நீலப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு வழிவகை செய்துள்ளது. அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர், திரு சாந்தனு தாக்கூர் கூறுகையில், “இந்தியா உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாகும். மேலும் துறைமுகங்களில் உள்கட்டமைப்பு ஆவணங்களை உருவாக்குவதற்கு கணிசமான அளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வணிகம் செய்வதை எளிதாக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரிக்கும். கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுது நீக்குவதை மேம்படுத்துதல்” துறைகளில் இந்தியாவை கடல்சார் பயிற்சிக்கான மையமாக மாற்றுவதற்கும் கடல்சார் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிந்தனைக் கூட்டத்தின் முதல் நாளில், முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில், துறைமுகங்களின் புதுமையான யோசனைகள் குறித்து பெரிய துறைமுகங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒரு பிரத்யேக அமர்வு கவனம் செலுத்தியது. மற்றைய அமர்வில் கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியாவை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர, பல்வேறு நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் கூட்டத்தில், முக்கிய துறைமுகங்கள் மூலம் சரக்கு கையாளுதல், துறைமுக அழைப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரப்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.
திவாஹர்