நாமக்கல் வெற்றி விநாயகா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 40-க்கும் மேற்ப்பட்டோர், நாமக்கல் பகுதியை சேர்ந்த தனியார் டூரிஸ்ட் பஸ்சில் ஏற்காடு சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்றும் இன்றும் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு இன்று (13.12.2014) மாலை சேலம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஏற்காடு மலைப்பாதையில் சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது 9 ஆவது மற்றும் 10 ஆவது கொண்டை ஊசி வளைவிற்கு இடையே பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு சுவறில் மோதி பஸ்சின் முன்பக்க இரு சக்கரம் வரை அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் அடியேதும் படவில்லை. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றிருந்தது. 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலை முழுவதும் வாகனங்கள் நின்றிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல் துறையினர் 2 மணி நேர போரட்டத்திற்கு பின்னர் பஸ்சை மீட்டனர்.
-நவீன் குமார்.