மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், தற்போதுள்ள உறவுகளை வலுப்படுத்தவும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் மூன்று நாள் பயணமாக இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் திரு. லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்தினம், வெளியுறவு அமைச்சர் டாக்டர். விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. கான் உள்பட சிங்கப்பூர் அரசின் பல்வேறு முக்கிய அமைச்சர்களை திரு. தர்மேந்திர பிரதான் சந்திக்கவுள்ளார்.
சிங்கப்பூர் ஸ்பெக்ட்ரா மேல்நிலைப்பள்ளி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு திரு. தர்மேந்திர பிரதான் செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது, திரு. தர்மேந்திர பிரதான் புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் ஒடியா சங்க உறுப்பினர்களை சந்திக்கிறார். சிங்கப்பூரில் உள்ள ஐஐடி மற்றும் ஐஐஎம்-மின் முன்னாள் மாணவர்களுடனும் அமைச்சர் உரையாடவுள்ளார்.
திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவும் சிங்கப்பூரும் நீண்டகால ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி பணிக்குழு, வாழ்நாள் முழுவதும் கற்றல், எதிர்கால வேலைகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
எம்.பிரபாகரன்