மத்தியப் பிரதேசத்தின் போபாலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் 2023 மே 27 முதல் 29 வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் முடிவில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இந்த முகாமில் எம்ஆர்ஃப் டயர்ஸ், எல்&டி உட்பட 107 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. உதவிப் பேராசிரியர்கள், மின் பொறியாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு வேலைகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. 630-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வேலைக்குத் தேர்வான நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகினர்.
சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம், கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. இதில் சுமார் 2,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பதிவு செய்தனர். சுமார் 200 தொழிலாளர்கள் இஎஸ்ஐஎஸ் மூலம் உடல்நலப் பரிசோதனை செய்து கொண்டனர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் ஆகியோர் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
திவாஹர்