கீர் பவானி விழா காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.

கீர் பவானி விழா காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளால்  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்தா அஷ்டமி தினத்தன்று காஷ்மீர் பண்டிட்டுகள் கீர் பவானி ஆலயத்தில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கீர் பவானி விழா, மே 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் மக்களும், காஷ்மீர் பண்டிட்டுகளும் உற்சாகமாக பங்கேற்றனர்.

 2023 மே 28 அன்று மாலை  சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜையுடன் இந்த விழா அமைதியாக நிறைவடைந்தது. அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சிக்காக காஷ்மீர் பண்டிட்டுகளும், உள்ளூர் மக்களும் பிரார்த்தனை செய்தனர்.  இந்த விழா மே 26-ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய ஆயுதப்படையினரும், ஜம்மு -காஷ்மீர் காவல் துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஷ்மீர் பண்டிட்டுகளின் ஆன்மீக நம்பிக்கையில் ஜேஷ்தா அஷ்டமியன்று நடைபெறும் கீர் பவானி விழா முக்கிய இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மாதா கீர்பவானியின் அருள் நம்முடன் எப்போதும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுதப்படையினர், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply