மணிப்பூர் மாநிலத்தில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இறுதி நாளான இன்று இம்பாலில் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

மணிப்பூர் மாநிலத்தில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இறுதி நாளான இன்று இம்பாலில் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் அமைதியைப் பராமரித்து பேச்சு வார்த்தை ஈடுபட்டு நல்லிணக்கத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். புரளிகளை நம்பவேண்டாம் என்றும் அமைதியை கடைப்பிடிக்குமாறும் மணிப்பூர் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மணிப்பூர் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மோடி அரசின் சார்பாக  உள்துறை அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில், நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மணிப்பூர் ஆளுநர் தலைமையின் கீழ், அமைதிக்குழு உருவாக்கப்படும் என்றும் இதில்  அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள் என்று அவர் கூறினார். வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய  அரசு மற்றும் மணிப்பூர் அரசின் சார்பில் நிவாரண மற்றும் மறுவாழ்வு உதவியாக தலா 5 லட்சம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply