ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஜம்முவில் முதலாவதாகவும், நாட்டில் ஆறாவதாகவும் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்முவில்  ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம் அமைக்கப்பட்டு இருப்பது இந்திய சிந்தனையின் கொண்டாட்டம் என்றும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எடுத்துக்காட்டும் விழா என்றும் கூறினார். இந்த ஆலயம் திறக்கப்பட்டு இருப்பதன்மூலம் இந்தியாவின் சமயம் சார்ந்த சுற்றுலாவில் ஜம்மு பகுதி முதன்மையானதாக மாறும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு, கிழக்கு முதல் மேற்கு வரை, வடக்கு முதல் தெற்கு வரை என தற்போது தேசத்தை ஒருங்கிணைக்கிறது என்று குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங்,  வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ்சங்கமும், ஜம்முவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயமும்  இதற்கு உதாரணங்கள் என்றார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply