இந்தியாவின் முதன்மையான இணையக் கொள்முதல் தளமான அரசு இ-சந்தை – ஜெம் உத்தரபிரதேசத்தின் அனைத்து 75 மாவட்டங்களிலும் நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை வாங்குவோர்-விற்போர் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்குகள் மாநிலத்தில் வாங்குவோர் மற்றும் விற்போரிடையே அரசு இ-சந்தையின் செயல்பாடுகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. மேலும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அல்லது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
இந்தப் பயிலரங்குகளின் போது, அரசு இ-சந்தையின் (ஜெம்) சிறப்புக் கூறுகள், பதிவு செயல்முறைகள் மற்றும் இணையவழிக் கொள்முதலின் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவான பயிற்சியைப் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். வாங்குபவர்களும் விற்பவர்களும் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஜெம் இணையதள வல்லுநர்களின் நேரடி உதவி கிடைக்கும்.
உத்தரபிரதேசம் மற்றும் நாடு முழுவதும் தடையற்ற, பயனுள்ள மற்றும் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்குவதில் ஜெம் உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு பங்குதாரருக்கும் அதிகாரம் அளிப்பது, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது என்ற ஜெம்-ன் அர்ப்பணிப்புக்கு இந்த வாங்குவோர்-விற்போர் பட்டறைகள் சான்றாகும்.
மத்திய, மாநில அரசுத் துறைகள், முகவர் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள வாங்குவோருக்கும் விற்போருக்கும் ஒரு சம வாய்ப்புள்ள களத்தை ஜெம் உருவாக்கியுள்ளது.
திவாஹர்