நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்!- ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோதி இன்று ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் ஜனநாயகத்தின் தாயான நாட்டின் மிகப் பழமையான நகரமான வாரணாசிக்கு வரவேற்றார். காசியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய பிரதமர், அது ஞானம். விவாதம், கலாச்சாரம், ஆன்மீகத்தின் மையமாக பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகிறது என்று கூறினார். நாட்டில் அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் பலதரப்பட்ட பாரம்பரியங்களின் சாரமாகவும் அது திகழ்கிறது. அதே போல ஜி20 வளர்ச்சியும் காசியை வந்தடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக திரு. மோடி தெரிவித்தார்.

உலகின் தெற்குக்கு வளர்ச்சி மிக முக்கிய விஷயம் என்று குறிப்பிட்ட பிரதமர், உலகப் பெருந்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது தென்பகுதி நாடுகள் என்று கூறினார். இதனால் ஏற்பட்ட புவி, அரசியல் பதற்றங்கள் காரணமாக உணவு, எரிபொருள். உரம் ஆகியவற்றுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இத்தகைய சூழலில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மனிதக்குலத்திற்கு பயனளிக்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி இலக்குகள் நின்று விடாமல் காப்பது மக்கள் அனைவரது கூட்டுப் பொறுப்பாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இலக்குகளை அடைய செயல்திட்டம் அவசியம் என்று உலகிற்கு ஒரு வலுவான செய்தியை தென்பகுதி நாடுகள் அறிவிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

நமது முயற்சிகள் விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நியாயமானதாகவும். நிலைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். நீடித்த வளர்ச்சி இலக்குளை அடைய முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். பல நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அபாயங்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். பன்நோக்கு நிதி நிறுவனங்கள் சீர்திருத்தத்திற்கு உட்பட்டு தகுதியை விரிவுபடுத்தி, தேவையானவர்களுக்கு நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய பின்தங்கிய மாவட்டங்கள் இன்று நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்குவிப்பவையாக உருவெடுத்துள்ளன என்று கூறிய பிரதமர், இந்த வளர்ச்சி மாதிரியை ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள்

ஆய்வு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். 2030 நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்துவதற்கு இந்தப் பணி பொருத்தமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் தரவு பிரிவு குறித்த விஷயத்தை விளக்கிய பிரதமர், அர்த்தமுள்ள கொள்கை வகுத்தல், திறன் வாய்ந்த வள ஒதுக்கீடு, செயல்திறன் மிக்க பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றுக்கு உயர்தரமான தரவு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். தரவு பிளவை சரிபடுத்த தொழில்நுட்பப் பயன்பாடு அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மக்களை அதிகாரப்படுத்துதல், தரவுகளை அணுகுதல், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றின் கருவியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் புரட்சிகரமான மாற்றத்தை டிஜிட்டல்மயமாக்கம் கொண்டு வந்துள்ளது. விவாதம், மேம்பாடு, வளரும் நாடுகளுக்கு தரவுகளை அளித்து உதவுதல் ஆகிய விஷயங்களில் இந்தியா தனது அனுபவத்தை மற்ற கூட்டு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நதிகள், மரங்கள், மலைகள் மற்றும் இயற்கையின் அனைத்து அம்சங்களுக்கும் நாம் மரியாதை செலுத்தி வருகிறோம். பூமிக்கு உகந்த வாழ்க்கை முறையை பாரம்பரியமான இந்திய சிந்தனைகள் மேம்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு ஐநா பொதுச் செயலாளருடன் லைஃப் இயக்கத்தை தாம் தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்த பிரதமர் உயரிய கொள்கைகளுடன் இந்தக் குழு வளர்ச்சிக்காக உழைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். பருவநிலை நடவடிக்கைக்கு இது குறிப்பிடத்தக்க பங்களிப்பதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது பாலின சமத்துவம் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் அவசியம் என்று குறிப்பிட்ட பிரதமர், மகளிருக்கு அதிகாரமளிப்பதுடன் இந்தியா நின்று விடாமல் மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார். பெண்கள் வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து வருவதாகவும், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான முகவர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர் என்றும் கூறிய பிரதமர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

உரையை நிறைவு செய்த பிரதமர், காசியின் எழுச்சி, இந்தியாவின் நீண்ட கால பாரம்பரியங்களை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். பிரதிநிதிகள் எல்லா நேரமும் கூட்டம் நடக்கும் அறைகளிலேயே காலத்தை கழிக்காமல் காசியின் உணர்வை அனுபவிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று திரு.மோடி கேட்டுக் கொண்டார். கங்கை ஆரத்தியை கண்டுகளிப்பதும், சாரநாத்தை பார்வையிடுவதும். நீங்கள் விரும்பும் முடிவுகளை எட்ட உங்களை ஊக்குவிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். உலகின் தென்பகுதி நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற வகை செய்யும், 2030 நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தும் வெற்றிகரமான விவாதங்களை மேற்கொள்ள தமது வாழ்த்துக்களை திரு. மோடி தெரிவித்துக் கொண்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply