குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் பற்றி மக்கள் மத்தியில் நிரபராதியாக நியாயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடும் தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்.
தமிழக அமைச்சர் ஒருவர் கடந்த கால ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்ற குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகும்.
அதாவது அமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு சம்பந்தமாக உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறைக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட பிறகே அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜி அவர்களிடமும், அவரின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று, அவர்களின் அலுவலகம், வீடு, தலைமைச் செயலகம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று பிறகே அவர் கைது செய்யப்பட்டார். இது சட்டத்திற்கு உட்பட்டதே. அவர் மீதுள்ள சந்தேகங்கள் மட்டுமல்லாமல் சில ஆதாரங்களின் அடிப்படையிலும் தான் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது. இது சட்டத்திற்கு புறம்பானது அல்ல.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை, ஆதாரங்கள் அடிப்படையில் கைதான ஒரு அமைச்சர் பற்றி மக்கள் மத்தியில் நிரபராதியாக நியாயப்படுத்தும் வகையில் பேசுகின்ற, செய்திகளை வெளியிடுகின்ற தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை ஆட்சியில் இருப்பவர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது என்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காக உண்மைக்குற்றத்தை திசைத்திருப்ப மத்திய அரசின் மீதும், அமலாக்கத்துறையின் மீதும் வீண்பழி சுமத்த தமிழக அரசு முயற்சிப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது.
குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.மேலும் மக்களுக்கு உண்மைநிலை தெரிய வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.
எனவே தமிழக அரசு, மக்களுக்காக பணியாற்ற அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் எவராக இருப்பினும் பதவிப்பிரமாணம் செய்யும் பொது எடுத்த உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என்ற பொது மக்களின் எண்ணத்தை த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா