மத்திய பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பெங்களூருவில் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய பாதுகாப்பு அமச்சகத்தின் சார்பில் பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் தற்சார்பு என்ற தலைப்பில் ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம் அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2023 ஜுன் 16-ம் தேதி நடைபெற்றது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாதுகாப்புத் துறையின் தற்சார்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் அமல்படுத்த எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன் எப்போதும் இல்லாத வகையில் சர்வதேச அளவிலான தற்போது சூழலில், சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மாற்றுவதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பை வலப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.  குறிப்பாக பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெற்றதாக, தற்சார்பு மிக்கதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். இதில் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை உதவும் வகையில், 2023-24-ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத கொள்முதலை ஊக்குவித்தல் உள்ளிட்டவை அடக்கம்.

மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இதன் மூலம் பாதுகாப்புத்துறை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நட்பு நாடுகளின் பாதுகாப்பு  சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதுடன், ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியிருப்பதாகவும் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், இந்த தேசமும் பாதுகாப்புத்துறையும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறினார்.

இறக்குமதி செய்யும் நாடாக உள்ள இந்தியாவை, ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்ற விரும்பினால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்திற்கே முதலிடம் என்ற மனப்பாங்குடன் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   இதன் மூலம் மட்டுமே தற்சார்பு உடைய இந்தியா என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, உறுப்பினர்கள் அளித்த மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத்துறை தலைமைத் தளபதி அனில் சவுகான், பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் டாக்டர் சமீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திவாஹர்

Leave a Reply