வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் கியாங் 2023, ஜூன் 18, 19 தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா – வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜூன் 19 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இருதரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவில் தங்கியிருக்கும் போது, ஆக்ராவிற்குக் கலாச்சாரப் பயணத்தையும் மேற்கொள்வார்.
இந்தியாவும் வியட்நாமும் விரிவான ராணுவ ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் இந்த ஒத்துழைப்புக்குக் குறிப்பிடத்தக்க தூணாக அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஈடுபாடுகள், ராணுவங்களுக்கிடையே விரிவான தொடர்புகள், இராணுவத்திற்கு இடையேயான பரிமாற்றங்கள், உயர்நிலை வருகைகள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள், ஐ.நா அமைதிப்படையில் ஒத்துழைப்பு, கப்பல் வருகைகள் மற்றும் இருதரப்பு பயிற்சிகள் உட்பட பலவகையாக உள்ளன.
2022, ஜூன் மாதத்தில் வியட்நாமுக்கு பாதுகாப்பு அமைச்சர் பயணத்தின்போது, ‘2030 ஆம் ஆண்டிற்கான இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பார்வை அறிக்கை’, ‘பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய முக்கிய வழிகாட்டும் ஆவணங்கள் கையெழுத்தாயின. இவை இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தியுள்ளன.
திவாஹர்