இந்தியா – உருகுவே இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி ஆழப்படுத்தும் நோக்கத்துடன் உருகுவே குடியரசின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அழைப்பின்பேரில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி தலைமையிலான 10 உறுப்பினர் இந்திய நாடாளுமன்ற நல்லெண்ணக் குழு 2023 ஜூன் 14-17 உருகுவேயில் பயணம் மேற்கொண்டது.
பல்வேறு கட்சிகளைக் கொண்ட இந்தக் குழுவில் மக்களவையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் மாநிலங்களவையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஜி. ஸ்ரீநிவாசும் இடம்பெற்றனர்.
உருகுவே தலைநகர் மான்டேவிடியோவில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்குத் தூதுக்குழு உறுப்பினர்களுடன் அமைச்சர் மலரஞ்சலி செலுத்தியதுடன் ஜூன் 15 அன்று அதிகாரபூர்வ பயணம் தொடங்கியது. இந்தச் சிலையின் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரம்ப்லா கடற்கரை சாலையின் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுக்குழுவினருடன் உருகுவே நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உருகுவே நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு செபாஸ்டின் அண்டுஜார் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள திரு ஜோஷி அழைப்புவிடுத்தார். இதையடுத்து 2023 இறுதிக்குள் உருகுவே நாடாளுமன்ற தூதுக்குழுவின் இந்தியப் பயணத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
எம்.பிரபாகரன்