மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரெடாய் கார்டன்- மக்கள் பூங்காவை இன்று திறந்து வைத்தார்.

ஜகந்நாதர் ரத யாத்திரையை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று  (20-06-2023) அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டார். ஜகந்நாதர் ரத யாத்திரை நம்பிக்கை மற்றும் பக்தியின் தெய்வீக ஒருங்கிணைப்பு என்று தமது ட்விட்டர் பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.  

அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்த திரு அமித் ஷா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். அகமதாபாத் மாநகராட்சியால் (ஏஎம்சி) புதிதாக கட்டப்பட்ட பூங்காவையும், சந்த்லோடியாவில் ரயில்வே துறையால் ரூ. 67 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ஜகத்பூர் ரயில்வே மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.  கிரெடாய் கார்டன்-மக்கள் பூங்காவையும் மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார். பாவ்லாவில் மருத்துவமனை ஒன்றிற்கு அடிக்கல்லையும் திரு அமித் ஷா நாட்டினார்.

கிரெடாய் கார்டன்-மக்கள் பூங்காவைத் திறந்து வைத்துப் பேசிய அவர், சுமார் ரூ.2.5 கோடி செலவில் 12,000 சதுர மீட்டரில் மக்கள் பூங்காவை கிரெடாய் (CREDAI) எனப்படும் இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு அமைத்துள்ளது என்று குறிப்பிட்டார். அதிகரித்து வரும் நகரமயமாக்கலில், தோட்டம் அல்லது பூங்கா என்பது சாதாரண மக்களுக்கு மிகவும் ஏற்ற மற்றும் வசதியான இடமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரவச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். யோகா தினம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் யோகாவை ஒரு பொதுமக்கள் இயக்கமாக பிரதமர் மாற்றியுள்ளார் எனவும் திரு அமித்ஷா கூறினார். யோகா தினத்தன்று 170 நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றுள்ளதாக அவர் கூறினார். மருந்துகள் இல்லாமல் வாழ்வதன் ரகசியத்தை நமது முனிவர்கள் யோக சாஸ்திரங்களில் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த ரகசியத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் யோகாவைக் கொண்டு சேர்க்கும் இயக்கத்தை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இயக்கத்தின் காரணமாக, 10 முதல் 15 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளதாகவும் திரு. அமித் ஷா கூறினார்.

உள்கட்டமைப்பு உருவாக்கம், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் கிரெடாய் (CREDAI) எனப்படும் இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருவதாகவும்  மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கிரெடாய் இந்த மக்கள் பூங்காவை உருவாக்கி இருப்பதுடன், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் 75 அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம் குழந்தைகளிடம் விளையாடும் பழக்கம் அதிகரித்து, அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.  காந்திநகரில் பல்வேறு பணிகளை விரைந்து நிறைவு செய்ததற்காக குஜராத் அரசு மற்றும் மாநகராட்சியை திரு. அமித்ஷா பாராட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் காந்திநகரில் சுமார் 5.42 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அகமதாபாத்தை பசுமையாக்குவதற்கான இயக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய மரக் கன்றுகளை நடுவதற்கு கிரெடாய் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply