அரசியல் சாசனத்தின் 35 ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ஜம்மு பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் இன்று (22.06.2023) அவர் உரையாற்றினார்.
தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைந்த பின் இந்தப் பகுதியில் முதலீடுகள் அதிகரித்து முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்று அவர் கூறினார். 35-ஏ மற்றும் 370 பிரிவுகள் தற்காலிகமாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அவை 70 ஆண்டுகள் நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் 370வது பிரிவை உருவாக்க மறுத்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பகுதியில் இப்போது இணக்கமான சூழல் நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார். வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காக தமது உயிரைத் தியாகம் செய்த டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பணிகளுக்கு இது மிகப்பெரிய மரியாதை என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு 890 மத்திய சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும் 200 க்கும் மேற்பட்ட மாநில சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா என்பது ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமானது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், மாணவர்கள் ஒருபோதும் பதற்றம் அல்லது மன அழுத்தத்துடன் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
எம்.பிரபாகரன்